தீக்குளித்து சமையல் தொழிலாளி தற்கொலை
சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சமையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 39). சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பாபுவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தொழிலளி பாபு உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.