மனம் உடைந்த பெண் தற்கொலை

இரும்பாலை அருகே பிறந்தநாள் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-15 20:18 GMT

இரும்பாலை

சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் லோகு மணி (வயது 28), கார் டிரைவர். இவர் மேச்சேரி அருகே உள்ள அமரகுந்தி வேடப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பிறந்தநாள் வந்தது. தனது பிறந்த நாளை ஏற்காட்டில் கொண்டாடலாம் என்று கணவரிடம் தெரிவித்தார். அதற்கு லோகு மணி, ஏற்காடு செல்ல வேண்டாம், உள்ளூரிலேயே பிறந்த நாளை கொண்டாடலாம் என கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி, தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் சென்றார். அப்போது தனது தந்தையிடம் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி எலி பேஸ்ட்டை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அந்த எலி மருந்தை (விஷம்) தந்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவருடன் வீட்டிற்கு வந்தார். பிறகு எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் நந்தினிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை லோகுமணி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு டாக்டர்களிடம் எலி மருந்து சாப்பிட்ட விவரத்தை கூறினார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நந்தினி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்