திருமணமான 1½ ஆண்டுகளில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 1½ ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
தூக்கில் தொங்கினார்
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் அருந்ததி தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 32). இவர் தனியாருக்கு சொந்தமான ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (27). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சர்வின் ஆதித்யா என்ற 4 மாத குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஐஸ்வர்யா தனது கணவர் கோபியிடம் குழந்தையை கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தபோது ஐஸ்வர்யா துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
உடனடியாக கோபி அவரை எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவுக்கும், கோபிக்கும் திருமணமாகி 1½ ஆண்டே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.