கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்புவனம் அருகே 4 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-07 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே 4 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் சிவகங்கை ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தை சேர்ந்த முத்துராமன் மகள் ராசாத்திக்கும்(வயது 25) கடந்த 15.5.2022 அன்று திருமணம் நடைபெற்றது. தற்போது ராசாத்தி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று முன்தினம் முத்துராமன் தனது மகளுக்கு போன் செய்தார். ஆனால் ராசாத்தி அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவர் மருமகன் விக்னேஸ்வரனுக்கு போன் செய்து பார்க்க சொல்லியுள்ளார். விக்னேஸ்வரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ராசாத்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து ராசாத்தியின் தந்தை முத்துராமன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், ராசாத்திக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதாவும் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்