நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

ஓசூரில் நீட் தேர்வுக்கு பயந்து பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-07 15:46 GMT

ஓசூர்:

ஓசூரில் நீட் தேர்வுக்கு பயந்து பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாணவர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களது மகன்கள் முரளி கிருஷ்ணா, கீர்த்திவாசன். கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற முரளி கிருஷ்ணா நீட் நுழைவுத்தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத அவர் தயாராகி கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று முன்தினம் வந்தது. இதைப் பார்த்து முரளி கிருஷ்ணா மனஅழுத்தத்தில், தன்னால் மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற பயத்தில் இருந்தார். மேலும் மன உளைச்சலில் தவித்த அவர் நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

மாணவர் முரளி கிருஷ்ணா தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான அந்த கடிதத்தில், எனக்கு நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்குமா. தேர்வில் என்னால நல்ல மார்க் ஸ்கோர் செய்ய முடியாது. என்னை மன்னிச்சிருமா. முடிந்த அளவு நான் முயற்சித்தேன். ஆனால், மெடிக்கல் சீட் வாங்கும் அளவிற்கு என்னால் ஸ்கோர் செய்ய முடியாது. நான் இந்த முடிவை எடுத்ததற்கு மன்னிச்சிரும்மா. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்மா என்று உருக்கமாக அந்த கடிதத்தில் முரளிகிருஷ்ணா எழுதியிருந்தார். இந்த கடிதத்தை ஓசூர் சிப்காட் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்