கணவர் விவாகரத்து கேட்டதால் விரக்தி: காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் கணவர் விவாகரத்து கேட்டதால் விரக்தி அடைந்த அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-13 22:14 GMT

அன்னதானப்பட்டி:

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் கணவர் விவாகரத்து கேட்டதால் விரக்தி அடைந்த அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். லாரி வாகன போக்குவரத்து அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி கீதா (வயது 27). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 6, 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கீதா அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த பார்த்திபன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்தார். அதன்பேரில் கீதாவை அழைத்து விசாரித்த போலீசார், கணவரின் நடத்தையில் சந்தேகப்பட வேண்டாம் என்று கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

விவாகரத்து கேட்டு நோட்டீஸ்

இருப்பினும் பார்த்திபன் நெத்திமேடு கேபிகரடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதே போல் கீதா கொண்டலாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் பார்த்திபன் கோர்ட்டு மூலம் விவாகரத்து கேட்டு மனைவி கீதாவுக்கு கடந்த 11-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன கீதா, நேற்று காலை சவுடேஸ்வரி நகரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று தனது துணிகளை எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார்.

தற்கொலை

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் குழந்தைகளை தொங்க விடும் தொட்டில் கயிற்றில் தூக்குப்போட்டு மயங்கிய நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் கணவர் விவாகரத்து கேட்டதால் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்