பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள் தேவூர் பகுதியில் முகாமிடும் வியாபாரிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதன் காரணமாக செங்கரும்புகளை வாங்க வியாபாரிகள் முகாமிட்டு வருகின்றனர்..

Update: 2022-12-15 20:08 GMT

தேவூர்,

கரும்பு சாகுபடி

பொங்கல் பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் செங்கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், பொங்கல் பண்டிகைக்கு 10 மாதங்களுக்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி, சித்தர் கோவில் மெயின் ரோடு, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக தேவூர் அருகே குள்ளம்பட்டி, சென்றாயனூர், செட்டிபட்டி, பழக்காரன்காடு, ஒடசக்கரை, பாரதிநகர், கல்வடங்கம், கொட்டாயூர், மேட்டாங்காடு, குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

அறுவடைக்கு தயார்

தற்போது தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு 9 மாதங்கள் முடிந்துள்ள வயல்களில் கரும்புகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. பின்னர் அறுவடை செய்யப்படும் கரும்புகள் மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தேவூர் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேவூர் பகுதியில் முகாமிட்டு செங்கரும்பு ஒரு ஜோடி ரூ.50 வீதம் மொத்தமாக விலை பேசி விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து வருகின்றனர். மேலும் சில வியாபாரிகள் செங்கரும்புகள் வாங்கி லாரிகளில் ஏற்றிச்செல்ல தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்