கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

கரூரில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-10 17:44 GMT

கரும்பு அறுவடை

கரூர் அருகே உள்ள வாங்கல், நெரூர், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரை பயிர், சோளம் மற்றும் கரும்பு சாகுபடிகளை விவசாயிகள் அதிகமாகவே மேற்கொள்கின்றனர். இந்நிலையில் பூந்தோட்டம் பகுதிகளில் தற்போது கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் புகழூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு விவசாயத்தை பொறுத்தவரை அறுவடை செய்வதற்கு சுமார் 12 மாதங்கள் ஆகின்றன. இதனால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதன் பலன்களை பெறுவதற்கு நீண்ட மாதங்கள் காத்து இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலியாக ரூ.1,200 கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட கரும்பு 1 டன்னுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உற்பத்தி அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி அதிகமாக உள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் வாகனங்களின் வாடகையும் அதிகமாக உள்ளது. இதனால் கரும்பு சாகுபடி செய்த ஒருசில பகுதிகளில் மழை பெய்யாததால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை பணிகள் செய்யப்படாமலேயே கால்நடைகளுக்கு தீவனமாக கொண்டு செல்லப்பட்டன.

இதனால் சில விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கரும்பு விலை கடந்த ஆண்டை காட்டிலும் 1 டன்னுக்கு ரூ.100 மட்டும் அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் அனைத்தும் புகழூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி அதிகரித்துள்ளது, என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்