பொங்கல் கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

தஞ்சை பகுதிகளில் பொங்கல் கரும்புகளை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், வியாபாரிகளை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.;

Update:2023-01-12 00:15 IST

தஞ்சை பகுதிகளில் பொங்கல் கரும்புகளை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், வியாபாரிகளை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் வெளிபடுத்தும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு. தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்புகள் தான். அதன் காரணமாகவே அரசு கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

கரும்பு அறுவடை

பொங்கல் கரும்பு நீண்ட கால சாகுபடி பயிராகும். சித்திரை மாதம் பயிர் செய்யப்பட்டு மார்கழி, தை மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

தஞ்சை பகுதியில் சூரக்கோட்டை, காட்டூர், கத்தரிநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3நாட்களே உள்ளதால் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வியாபாரிகளை எதிர்நோக்கி

இதுகுறித்து சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி அருண் கூறுகையில்:- தஞ்சை பகுதியில் இருந்து கரும்புகளை வியாபாரிகள் வாங்கி சென்று சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக வியாபாரிகள் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு வந்து கரும்புகளை தரம்பார்த்து வாங்கி செல்வர். தற்போது கரும்பு கட்டுகளை வியாபாரிகள் ரூ.150 முதல் ரூ.200 வரை வாங்கி செல்கின்றனர்.

அரசு கரும்புகளை கொள்முதல் செய்வதால் தஞ்சை பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு 6 அடிக்கு மேல் உள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. இதனால் பெரும்பாலான வயல்களில் அதிகளவில் கரும்புகள் தேங்கி உள்ளது. இதன்காரணமாக வியாபாரிகளின் வருகையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்