நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலுவை தொகையை வழங்க கோரி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-19 07:46 GMT

திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பெருமாள் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேர வேண்டிய நிலவை தொகை ரூ.25 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு 4 ஆயிரம் வழங்க வேண்டும். 2022-2023-ம் ஆண்டு ஆலையின் அரவையை அக்டோபர் மாதமே தொடங்க வேண்டும், கட்டுக் கழிவு தொகை 3 சதவீதம் பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கவேண்டும்.

ஆலைய நிர்வாகம் பொதுக்குழு கூட்டம் மற்றும் முத்தரப்பு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்க்கரை விற்பனையில் கோட்டா முறையை கைவிட வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய வாகன பாக்கியை உடனே வழங்க வேண்டும், ஆலையை மேம்படுத்தி இணைமின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைய அதிகாரிகளிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை.

ஆலைய மேலாண்மை இயக்குனர் விடுப்பில் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கை எடுத்து கூறுவதாக தெரிவித்தனர். மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்