தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க 4¾ லட்சம் கரும்பு கொள்முதல்-கணக்கெடுப்பு பணி தீவிரம்
அரூர்:
தர்மபுரி மாவட்டத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறைவாக இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 70 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் வேளாண்மை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றின் உயரம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். அரூர் பகுதியில் வேளாண்மை துறை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் காந்தி நகர், அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பின் தரத்தினை ஆய்வு செய்தனர். இதனைடுத்து விவசாயிகளிடம் கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர் விவரம், வங்கிக் கணக்கு எண், சிட்டா, அடங்கல் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து, அரசு வழங்கியுள்ள விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றனர்.