குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நிறுத்தம்

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நிறுத்தப்பட்டது.

Update: 2022-12-21 20:18 GMT

தஞ்சாவூர்;

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நிறுத்தப்பட்டது.

சர்க்கரை ஆலை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை அருகே குருங்குளத்தில் அரசுக்கு சொந்தமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும். இந்த ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் அரவைப்பருவம் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்தநிலையில் விவசாயிகள் முன்கூட்டியே அரவை பருவத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதின் அடிப்படையில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அரவைப்பருவம் தொடங்கியது.அதாவது கடந்த மாதம் 23-ந் தேதி நடப்பு ஆண்டான 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி தொடங்கியது. விவசாயிகளும் கரும்புகளை அரவைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கரும்பில் இருந்து வரக்கூடிய கழிவுகளை விவசாயிகள் உரமாக பயன்படுத்தி வந்தனர்.

அரவை பணி நிறுத்தம்

இந்த உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கரும்பில் இருந்து வரக்கூடிய கழிவுகளை உரமாக பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதன்காரணமாக இந்த கழிவுகள் தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களும் இந்த கழிவுகளை எடுத்து செல்ல ஆர்வம் காட்டாததால் கழிவுகள் அதிகஅளவில் குவிந்து காணப்படுகிறது.தினமும் கரும்பு அரவை பணி நடக்கும்போது மேலும் கழிவுகள் சேர்ந்து வந்ததால் அந்த கழிவுகள் அழுத்தம் காரணமாக சுவர் சாய்ந்து, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் டிராஸ்பார்மர் பழுதானதால் கரும்பு அரவை பணி நிறுத்தப்பட்டுள்ளது. கழிவுகளை எல்லாம் அப்புறப்படுத்தி, சாய்ந்த சுவரை அகற்றி டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் கரும்பு அரவை பணி மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்