பொங்கலையொட்டி வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் கரும்பு விலை உயர்வு

Update: 2022-12-18 16:51 GMT


பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மடத்துக்குளம் பகுதியில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால், கரும்பு விலை உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

வெல்ல உற்பத்தி

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.இங்கு அமராவதி அணையிலிருந்து பெறப்படும் பாசன நீரைப் பயன்படுத்தியும், இறவைப் பாசனத்திலும் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது வெல்ல உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் கரும்பு அறுவடை மேற்கொண்டுள்ள விவசாயிகள் நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பெறப்படுவதாலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் உற்பத்தி தொழில் அதிக அளவில் நடைபெற்றதாலும் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

ஆனால் வெள்ளை சர்க்கரையின் ஆதிக்கத்தால் வெல்லம் பயன்பாடு படிப்படியாக குறைந்தது.அத்துடன் வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலை நீடித்தது.

மழைநீர் தேக்கம்

அமராவதி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு சாகுபடி மேற்கொண்ட பல விவசாயிகள் உரிய பருவத்தில் கரும்புகள் அறுவடை செய்யப்படாததால் இழப்பை சந்தித்தனர். அத்துடன் கூலி ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்தனர். இதனால் விரைவாக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனையடுத்து படிப்படியாக கரும்பு சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,300 வரை விலை கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

அறுவடை பணி தீவிரம்

அதேநேரத்தில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் பல விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் கரும்பின் தன்மை மாறி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் விரைவாக அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும், நல்ல விலை கிடைத்து வருவதாலும் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமராவதி சர்க்கரை ஆலையில் இது அரவைப் பருவம் இல்லை என்றாலும் பல விவசாயிகள் பொங்கலைக் கருத்தில் கொண்டு சாகுபடிப் பணிகள் மேற்கொண்டிருந்தனர். இதனால் மடத்துக்குளம் பகுதியில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரும்பைப் பொறுத்தவரை 9 முதல் 12 மாதங்களுக்குள் அறுவடை செய்யும்போது அதிக சாறு மற்றும் அதிக சர்க்கரை உற்பத்தித்திறன் கொண்டதாக இருக்கும். இதனால் உரிய பருவத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை நல்ல விலை கொடுத்து வெல்ல உற்பத்தியாளர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்