கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடக்கம்-4 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு

Update: 2022-12-05 18:45 GMT

தர்மபுரி:

கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை செய்யும் பணி தொடங்கியது. 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரும்பு அரவை

தர்மபுரி மாவட்டம் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ரஹ்மத்துல்லா கான் வரவேற்றார்.

தொடர்ந்து கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் கரும்பு அரவையை தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 10 ஆயிரத்து 577 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பதிவு செய்யப்பட்டு, சுமார் 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு அரவை பணியை மேற்கொள்ள ஏதுவாக, தோட்டங்களிலிருந்து கரும்பினை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 115 லாரிகளும், 80 டிராக்டர்களும், 41 டிப்பர்களும், 25 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அரவை செய்யப்படும் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,126.25 வழங்கப்படும்.

ஊக்கத்தொகை

தமிழக அரசு கடந்த 2021-2022- ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக அங்கத்தினர்கள் அனுப்பிய கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 3,458 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.5 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. தற்போது நல்ல மழை பெய்துள்ள காரணத்தினால் எதிர்வரும் 2023-20240-ம் ஆண்டிற்கான அரவை பருவத்தில் ஆலையின் முழுக் கொள்ளளவு அரவை திறனான 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பினை 14 ஆயிரம் ஏக்கரில் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்