தவிக்க வைக்கும் தங்கம் பொதுமக்கள் என்ன சொல்கிறாா்கள்?

தவிக்க வைக்கும் தங்கம் பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

Update: 2022-12-05 18:45 GMT

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.

ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.

அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

எட்டாக்கனியாக உள்ளது

விழுப்புரம் ரங்கநாதன் தெரு பிரபாவதி:-

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை கடை பக்கம் செல்வதற்கே யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. வசதி படைத்தவர்களுக்கு தங்கத்தின் விலை உயர்வு என்பது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. ஆனால் எங்களைப்போன்ற ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக உள்ளது. பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அவ்வப்போது சிறுக, சிறுக ஒரு, ஒரு கிராம் தங்க நாணயமாக வாங்கி சேர்க்கலாம் என்றால் தற்போதும் அதுவும் முடியாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரம் வரை விற்கிறது. இப்படியே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் பெண்களின் திருமணத்துக்காக எப்படி நகை சேர்க்க முடியும்? அரசு சார்பில் வழங்கி வந்த தாலிக்கு தங்கம் வழங்குவதையும் நிறுத்திவிட்டனர். எனவே தங்கத்தின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழிவகை செய்ய வேண்டும்

மேல்மலையனூர் லட்சுமி:-

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இப்படியே தொடர்ந்து விலை அதிகரித்து வந்தால் சாதாரண மக்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிடும். எனவே தங்கம் விலையை கட்டுக்குள் வைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்க வழிவகை செய்ய வேண்டும்.

தலையே சுற்றுகிறது

செஞ்சி அருகே களவாய் கூட்டுசாலை பகுதி மல்லிகா:-

தங்கம் விலை உயர்வு அச்சத்தை தருகிறது. பெண் பிள்ளை பெற்றவர்களுக்குத்தான் தெரியும் தங்கத்தின் அருமை. முன்பெல்லாம் 30 பவுன், 50 பவுன் என கல்யாண சீர்வரிசைக்கு போடும்போது 20 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் தற்போது ரூ.40 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஆனால் இப்போதும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது 100 பவுன் சாதாரணமாக கேட்கிறார்கள். தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தங்கம் விலை உயர்வை கேட்டால் தலையே சுற்றுகிறது.

நடுத்தர குடும்பத்தினருக்கு பாதிப்பு

திண்டிவனத்தை சேர்ந்த பைரோஸ்:-

தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது, விலை குறையும் என்ற எதிர்பார்ப்புடன் ஏழை மக்கள் இருந்த நிலையில் விலை நாளுக்கு நாள் அதிகமாகி வருவது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏழை பெண்களின் திருமண வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகும். ஏழை பெண்களுக்கு அவசர காலத்தில் உதவும் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும். தங்கத்தின் விலை ஏற்றம் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சேதாரத்தின் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்த பாக்கியலட்சுமி:- தங்கம் விலை உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அனைவரும் நகை எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கம் விலை தான் உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் சேதாரம் என ஒரு பவுனுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 வரை கடைக்காரர்கள் வாங்குகின்றனர். ஒரு பவுனுக்கு சேதாரமாக ஒரு கிராம் நகை எடையைவிட அதிகமாக நம்மிடம் பணத்தை கடைக்காரர்கள் வசூல் செய்கின்றனர். சேதாரம் என்றால் அந்த நகை மீண்டும் பயன்படுத்த முடியாமல் கீழே வீசி எறிவது தான். ஆனால் நகை செய்யும்போது ஏற்படும் சேதாரமான நகையை மீண்டும் நகையாக உருக்கி செய்கின்றனர். ஆனால் சேதாரம் என நம்மிடம் அதிக தொகை வாங்குகின்றனர்.எனவே மத்திய அரசும், மாநில அரசும் தங்கம் விலை மற்றும் சேதாரத்தின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்