குவைத்தில் உணவின்றி தவித்த கீழக்கரை வாலிபர் மீட்பு

குவைத்தில் உணவின்றி தவித்த கீழக்கரை வாலிபர் மீட்கப்பட்டார்

Update: 2023-09-15 18:45 GMT

கீழக்கரையை சேர்ந்த சுல்தான் (வயது 27). இவர் குவைத் நாட்டில் உள்ள ஒரு வீட்டில் சமையல் உதவியாளர் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு சென்றதும் அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதுகுறித்து முதலாளியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மிக கடுமையாக அவரை தாக்கி ஒரு வாரம் உணவு இல்லாமல் மீண்டும் பாலைவனத்தில் விட்டு சென்று விட்டாராம். உணவின்றி பசியில் வாடிய சுல்தான் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓர் இடத்திற்கு நடந்து சென்று தொலைபேசி மூலம் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவருடைய தாயார் தனது மகனை மீட்டு தர வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட அயலக அணி தலைவர் கீழக்கரை முகமது ஹனிபாவிடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உதவியுடன் அயலக அணி மாநில செயலாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா எம்.பி.யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம் குவைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு சுல்தான் மீட்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் இந்தியா வந்து சேர்ந்தார். தனது மகனை மீட்டெடுக்க உதவியாக இருந்த மாவட்ட அயலக அணி மாநில செயலாளர், எம்.எல்.ஏ., அயலக அணி மாவட்ட தலைவர் ஆகியோருக்கு சுல்தான் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்