திடீர் பள்ளத்தில் இறங்கி லாரி நின்றது

பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் திடீர் பள்ளத்தில் இறங்கி லாரி நின்றது

Update: 2022-08-26 16:29 GMT


பொள்ளாச்சி

பொள்ளாச்சி -பல்லடம் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று வருகின்றன. இந்த நிலையில் சூடாமணி கூட்டுறவு சங்கம் அருகே சாலை குண்டும், குழியுமாக இருந்தது.

இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வந்த வழியாக ஒரு லாரியின் முன்பக்க வலது டயர் திடீரென்று பள்ளத்தில் இறங்கி நின்றது. இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் விபத்துகள் நடக்காமல் தடுக்கும் வகையில் மகாலிங்கபுரம் போலீசார் தடுப்பு வைத்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி -பல்லடம் சாலையை சரிவர பராமரிக்காததால் லாரி சென்ற போது திடீரென்று பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் லாரி சிக்கிய போது வேறு வாகனங்கள் வந்து மோதி இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.

மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி இருந்தால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே சாலை பணிகளை அதிகாரிகள் தரமானதாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்