கோவை மாநகராட்சி கூட்டத்தில் திடீர் சலசலப்பு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திடீர் சலசலப்பு

Update: 2023-05-15 18:45 GMT

கோவை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மேயரை பதவி விலக வற்புறுத்திய அ.தி.மு.க. கவுன்சிலருக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச் செல்வன், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய போது அ.தி.மு.க.கவுன்சிலர் பிரபாகரன் ஒரு பிரச்சினையை கிளப்பி பேசினார். அவர் கூறியதாவது:-

கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி வருவதை கண்டு கொள்ளவில்லை. கடந்த 4 மாதமாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. பொது மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் மாநகர மேயர் கல்பனா செயல்படுவதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

காரசாரவிவாதம்

இதற்கு மேயர் கல்பனா கண்டனம் தெரிவித்தார். மேலும் தி.மு.க கவுன்சிலர்கள் அ.தி.மு.க. கவுன்சிலரின் பேச்சுக்கு எதிர் குரல் எழுப்பினர்.இதனால் அவையில் சிறிது நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் எழுந்து நின்று அ.தி.முக கவுன்சிலரை பேசவிடாமல் கூச்சல் போட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர்சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. அதன்பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். 95-வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர், கடந்த 30.11.2022, 29.12.2022, 30.1.2023 ஆகிய மாநகராட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் 4 மாதமாக கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராமல் இருந்தால் மாநகராட்சி சட்டவிதிப்படி கவுன்சிலராக பதவி வகிப்பதற்கு அதிகாரமில்லாத நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிவின் அடிப்படையில் அவருக்கு அனுமதி அளித்தால் தொடர்ந்து பங்குபெறலாம் என்று சட்டவிதிகள் உள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலராக தொடர அனுமதி அளிக்கப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி:- சிங்காநல்லூரில் வீட்டு வசதிவாரிய வீடுகள் மிகவும் சேதம் அடைந்தநிலையில் உள்ள வீடுகளை அகற்றி புதிதாக வீடுகட்டி ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவும், எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் அந்தமக்களுக்கு நன்மை செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூட்டத்தில் தெரிவித்தார்.

அதிகாரி மீது நடவடிக்கை

மத்திய மண்டல தலைவர் மீனாலோகு:- சிவானந்தாகாலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் காண்டிராக்டருக்கு ஆதரவாக மாநகராட்சி பொறியாளர் ஒருவர் செயல்படுகிறார். மண்டல தலைவர், கவுன்சிலர்கள் கூறினால் எந்த பணியையும் செய்வதில்லை.

மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் அழகு ஜெயபாலன் :- மாநகராட்சி பணிகளில் தரத்தை கண்காணிக்க வேண்டும். கவுன்சிலர்களிடமும் பணிகள் நடைபெறும் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.) :- மாநகராட்சி கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுடன், கூட்டம் முடியும்போது தேசிய கீதம் பாடும் நடைமுறையை மாநகராட்சி கூட்டத்தில் செயல்படுத்த வேண்டும். சுகாதார குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆன்லைனில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் கவுன்சிலர்களிடம்பொதுமக்கள் புகார் அளித்து, அதனை அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் பணிகள் நடைபெற தாமதம் ஆகிறது. கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மதிப்பளிக்க வேண்டும். சாலைகள் குண்டும், குழியமாக உள்ளது. பள்ளிகள் தொடங்கும் முன்பு சீரமைக்க வேண்டும்.

சுகாதாரக்குழு தலைவர் மாரி செல்வன்:- கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்த பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜூன் மாதத்தில் தீர்வு

கூட்டத்தில் பேசிய பல கவுன்சிலர்களும் குடிநீர் வினியோகம் செய்ய 12 நாட்களுக்கு மேல் ஆவதாக குற்றம்சாட்டினார்கள். இதற்கு பதில் அளித்து ஆணையாளர் பிரதாப் கூறும்போது, சிறுவாணியில் கேரளா தடுப்பு அணை கட்டுவது குறித்து தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. தற்போது சிறுவாணியில் 6.14 அடி நீர்மட்டம் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளும் ஜூன் மாதம் முடிவடைந்துவிடும். ஜூன் மாதம் முதல் குடிநீர் பிரச்சினை தீரும் என்று தெரிவித்தார்.

கவுன்சிலர் கார்த்திக்செல்வராஜ், அகமது கபீர், மல்லிகா, கார்த்திக் உள்பட பலரும் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

கூட்டத்தில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்