காட்டூரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் மறியல்

காட்டூரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-11 19:56 GMT

ஊதியம் குறைப்பு

திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் சுமார் 1,700 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.575 வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கி வந்த ஊதியத்தை குறைத்து நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்குவதாக கூறியுள்ளது. இதற்கு ஏராளமான தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 1,200 தூய்மை பணியாளர்களை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது. ஆனால் இது பற்றி தெரியாமல் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து தங்களது வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர்கள் வேலை பார்த்துவிட்டு மாலையில் வேலை பார்க்க வந்தபோது, அவர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், காலையில் அவர்கள் பார்த்த வேலைக்கு கூலி கிடையாது என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளனர்.

மறியல்

இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு மீண்டும் வேலை மற்றும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பணி நீக்கம்

பின்னர் இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 1,700 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் 1,200 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் மாநகராட்சியில் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந் தேதி முதல் 15 நாட்களாக வேலை பார்த்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை. கடந்த காலங்களில் போராடி பெற்ற 575 ரூபாய் என்ற சம்பளத்தை குறைத்து 500 ரூபாய் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குகின்றனர். கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது, என்று கூறினர்.

மறியல் போராட்டத்தால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்