சென்னை - பெங்களூரு மாடி ரெயில் பெட்டியில் திடீர் புகை:
சென்னை- பெங்களூரு மாடி ரெயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் திடீரென புகை வந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.;
ஜோலார்பேட்டை,
சென்னை - பெங்களூரு இடையே தினமும் மாடி ரெயில் (டபுள் டெக்கர்) இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம் போல் நேற்று காலை 7.35 மணியளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி மாடி ரெயில் புறப்பட்டது.
காலை 9.16 மணியளவில் காட்பாடியை ரெயில் சென்றடைந்தது. அதன் பிறகு பெங்களூரு நோக்கி சென்றது. இந்த ரெயில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் - குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது ரெயிலின் சி.6 என்ற ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரெயில் நிறுத்தம்
உடனடியாக ரெயில் பெட்டியில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டிக்கெட் பரிசோதகர் என்ஜின் டிரைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து ரெயிலை நிறுத்த செய்தார்.
அதன் பின்னர் ரெயில் பெட்டியில் சக்கரம் அருகே சோதனை செய்தனர். அப்போது பிரேக் பைண்டிங் ஆன காரணத்தினால் புகை வந்தது தெரிந்தது. இதனையடுத்து ரெயில் பெட்டியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் அதனை 12 நிமிடங்களில் சரி செய்தனர்.
இதனால் டபுள் டெக்கர் ரெயில 12 நிமிடம் தாமதமாக பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. உடனடியாக ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.