கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பழுதடைந்த விடுதி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் கல்லூரி மாணவர்கள் தஞ்சையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 20:32 GMT

பழுதடைந்த விடுதி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் கல்லூரி மாணவர்கள் தஞ்சையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரி விடுதி

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருக மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 4000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் விடுதி கட்டிடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதாகவும் மேலும் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் புதிய விடுதி கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாணவர்கள் மறியல்

இந்த நிலையில் நேற்று காலை விடுதி மாணவர்கள் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்