ஆதித்தமிழர் கட்சியினர் திடீர் சாலை மறியல்

சங்கரன்கோவிலில் ஆதித்தமிழர் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-28 18:45 GMT

சங்கரன்கோவில்:

மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிர படுத்தக்கோரியும், அரியநாயகிபுரம் சீனுவின் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் ஆதித்தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

தேரடி திடலில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு போலீசார் சென்றனர். அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று வேனில் ஏறுமாறு அறிவுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர், டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாசன் மற்றும் போலீசார் ஆதித்தமிழர் கட்சியினரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள். இதையறிந்த கட்சியின் மாநில தலைவர் ஜக்கையன் தலைமையில் நிர்வாகிகள் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அந்த வேனை வழிமறித்து சாலையில் படுத்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை 24 பெண்கள் உள்ளிட்ட 88 பேரை கைது செய்து சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

--------------

Tags:    

மேலும் செய்திகள்