கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 3 நாளில் 20 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-29 15:10 GMT

கச்சிராயப்பாளையம்:

கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்காக திறக்கப்படும்.

அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோமுகி அணையில் 20 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.

தொடர் மழை

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கல்வராயன்மலை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் கல்வராயன்மலையில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் கல்வராயன்மலையின் அடிவாரமான கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் மூலம் கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் வந்தது. இது இன்று படிப்படியாக குறைந்து மதியம் 2 மணி அளவில் வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்தது.

நீர்மட்டம் உயர்வு

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 35 அடியாக உள்ளது. அதாவது கடந்த 3 நாளில் மட்டும் 15 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து நீர் வரும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்