புதுக்கோட்டையில் திடீர் மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டையில் திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-07-30 18:50 GMT

திடீர் மழை

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. மதியம் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ½ மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை மின்சார வாரியத்துறை அலுவலகம் முன்பு மழைநீரில் வாகனங்கள் சீறியபடி சென்றன. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடையை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. மழைக்கு பின் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது.

இடி-மின்னல்

விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த குன்னத்தூர், கலிமங்களம், ஆம்பூர்பட்டி, ஆவூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து இடி-மின்னல், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்த மழை மலம்பட்டி, ஆலங்குடி, பாக்குடி, மருதம்பட்டி, கருப்பர்மலை, நாங்குபட்டி உள்ளிட்ட விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலும் பெய்தது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பலத்த மழையால் காடுகள், வயல்வெளிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த மழை கடலை, பயறு உள்ளிட்ட மானாவாரி விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழைநீர் தேங்கியது

கீரனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 5 மணியளவில் கருமேகங்கள் திரண்டு இடி- மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கீரனூர் பஸ் நிலையம், மார்க்கெட், வடக்குரதவீதி, சிவன் கோவிலில் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது.

Tags:    

மேலும் செய்திகள்