நாகை பகுதியில் திடீர் மழை
நாகை பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட்டெரித்த வெயில்
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நாகையில் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வேறு வழி இல்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், துணியால் தலையை மூடிய படியும் வெளியில் சென்று வந்தனர்.
பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் இருந்தது. இதனால் மின்விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக வீசியது. வேளாங்கண்ணி, சிக்கல் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தாலும் அந்த நேரத்தில் நாகையில் மேகமூட்டம் தான் காணப்பட்டதே தவிர மழை பெய்யவில்லை.
திடீர் மழை
இதனால் நாகை மக்கள் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நாகையில் காலை வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.
இந்த திடீர் மழை காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். ஒரு மாதத்துக்கு மேலாக வாட்டி வதைத்த வெயிலால் வேதனையில் இருந்த நாகை பகுதி மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.