பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்

எடப்பாடி பழனிசாமி வரவேற்க பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கொடி கட்டுவதற்கு அனுமதி மறுத்ததால் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-10 17:10 GMT

பொள்ளாச்சி

எடப்பாடி பழனிசாமி வரவேற்க பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கொடி கட்டுவதற்கு அனுமதி மறுத்ததால் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதி மறுப்பு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோட்டூர் நகர செயலாளர் பாலு இல்ல விழாவிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகிறார். இதற்காக பொள்ளாச்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக கோவை ரோட்டில் பிளக்ஸ் பேனர்களை அ.தி.மு.க.வினர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்சி கொடிகள் கட்டினர்.

இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை எடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர். பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் அ.தி.மு.க.வினர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன் திரண்டனர்.

போராட்டம்

பின்னர் போலீசாரை கண்டித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்ஏ. தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அ.தி.மு.க. போராட்டம் காரணமாக காந்தி சிலை அருகில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பிளக்ஸ் பேனர் வைக்கவும், கட்சி கொடி கட்டவும், மேடை அமைக்க அனுமதி அளிக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் மீண்டும் அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்