ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு

அசைவ உணவு சாப்பிட்டு மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரால், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-02 13:31 GMT

ஆரணி

அசைவ உணவு சாப்பிட்டு மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரால், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போராட்டம் நடத்தப்போவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் மோகனன் தெருவை சேர்ந்த ஆர்.கணேஷின் மகன் திருமுருகன் (வயது 17). பிளஸ்-2 மாணவரான அவர் பொதுத்தேர்வின் இறுதிநாளில் ஆரணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் தந்தூரி உணவு சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும் இந்து முன்னணி சார்பாக போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆரணி நகர இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் ஆரணி பழைய பஸ் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை எதிரே உள்ள அசைவ ஓட்டல் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக, கும்பலாக நின்றிருந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கேட்டனர். அதற்கு அவர்கள், நாங்கள் போராட்டம் நடத்தவரவில்லை, எனத் தெரிவித்தனர்.

ஓட்டல்களில் ஆய்வு

அதைத்தொடர்ந்து ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு வந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து ஆரணி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வந்து ஓட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டலில் கெட்டுப்போன 2 கிலோ கோழி இறைச்சி இருந்ததாகவும், அதைப் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்ததாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் அங்குள்ள ஊழியர்கள் தலையில் முறையாக கவர் அணியவில்லை, கைகளில் உறைகள் அணியவில்லை, உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்கவில்லை, எனக்கூறி அறிவிப்பு நோட்டீசு வழங்கினர். இந்த ஓட்டலுக்கு சம்பந்தப்பட்ட மற்றொரு ஓட்டலான பழைய பஸ் நிலைய பகுதியில் மணிக்கூண்டு அருகே உள்ள ஓட்டலிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பரிசோதனை அறிக்கை

பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் கூறுகையில், பள்ளி மாணவர் திருமுருகன் இறப்பு குறித்து எனக்கு 'வாட்ஸ் அப்' மூலம் தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் உணவு பொருள் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளேன். அதில் சிக்கன் சேர்வா உள்ளிட்டவைகள் அடங்கும். பரிசோதனை அறிக்கை வர 14 நாட்கள் ஆகும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்