பருப்பு, பயறு வகைகள் விலை திடீர் உயர்வு
பலசரக்கு கடைகளில் பருப்பு, பயறு வகைகளின் விலை திடீரென உயர்ந்ததால் சாதாரண, நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள்
பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களின் பட்டியலில் அரிசிக்கு அடுத்து பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருமுறை அரிசி விலை உயர்ந்தால், அடுத்த முறை பிற பொருட்களின் விலை உயர்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை போட்டி போட்டு உயர்வதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி, சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டிலும் துண்டு விழுந்து விட்டது. அதை சமாளிக்க முடியாமல் சாதாரண குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன.
பருப்பு, பயறு விலை உயர்வு
இந்த நிலையில் பருப்பு, பயறு வகைகளின் விலை கடந்த வாரம் திடீரென உயர்ந்தது. இதையடுத்து அனைத்து பலசரக்கு கடைகளிலும் பருப்பு, பயறு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு விட்டது.
அதன்படி திண்டுக்கல்லில் கடந்த வாரம் கிலோ ரூ.165-க்கு விற்ற துவரம் பருப்பு தற்போது ரூ.190-க்கும், பாசி பருப்பு ரூ.120-ல் இருந்து ரூ.125-க்கும், கடலைபருப்பு ரூ.75-ல் இருந்து ரூ.90-க்கும், உளுந்தம்பருப்பு ரூ.125-ல் இருந்து ரூ.135-க்கும், பட்டாணி பருப்பு ரூ.65-ல் இருந்து ரூ.75-க்கும் விற்கிறது.
இதேபோல் கருப்பு சுண்டல் ரூ.75-ல் இருந்து ரூ.100-க்கும், வெள்ளை சுண்டல் ரூ.130-ல் இருந்து ரூ.150-க்கும், மொச்சை ரூ.140-ல் இருந்து ரூ.180-க்கும், வெள்ளை மொச்சை ரூ.160-ல் இருந்து ரூ.200-க்கும், கருப்பு உளுந்து ரூ.105-ல் இருந்து ரூ.115-க்கும், பாசி பயறு ரூ.110-ல் இருந்து ரூ.120-க்கும், பச்சை பட்டாணி ரூ.100-ல் இருந்து ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதனால் மாதத்தின் தொடக்கத்தில் பலசரக்கு கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அரிசி, சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் சாதாரண, நடுத்தர குடும்பத்தினர் சிரமத்தில் உள்ளனர்.
இதற்கிடையே பருப்பு மற்றும் பயறு வகைகளின் விலை உயர்வு பெரும் ஏமாற்றத்தையும், சிரமத்தையும் கொடுத்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரணம் என்ன?
தமிழகத்தில் பருவமழை குறைந்ததால் விளைச்சல் பாதித்தது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், பருப்பு மற்றும் பயறு வகைகளின் விலை உயர்ந்து விட்டதாக வியாபாாிகள் கூறுகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளை மனதில் கொண்டு வெளிமாநில மொத்த வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கலாம் என்று உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறினர்.
(பாக்ஸ்) ஒன்று குறைந்தால் மற்றொன்று அதிகரிப்பு?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி, சீரகத்தின் விலை உயர்ந்தது. அதையடுத்து காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் அதிகரித்தது. அதிலும் தக்காளி, சின்னவெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இதனால் தினசரி சமையலில் தக்காளியை சேர்ப்பதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது குறைந்துவிட்டது. தக்காளி ரூ.8-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒன்று குறைந்தால் மற்றொன்றின் விலை அதிகரிக்கிறததே? என்று மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.