அரசு பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஜிகா வைரஸ் பாதிப்பா என சந்தேகம்
கேரளாவில் அரசு பள்ளி மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.;
கண்ணூர்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுடன் உடல் வலி, தோல் அரிப்பு உள்ளதால் அவர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. தலச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாணவிகள், பரியாரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே, தலச்சேரி மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் என 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.