பொதுமக்களுக்கு திடீர் காய்ச்சல் பாதிப்பு
பொதுமக்களுக்கு திடீர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில், தொடர் மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். விட்டு, விட்டு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்கள் தோறும் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ஊசூர் வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 160-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.