திருப்பரங்குன்றம் அருகே மலைப்பகுதியில் திடீர் தீ- வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம் அருகே மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-02-14 20:43 GMT


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை உச்சியில் கபாலீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோபாலி மலைப்பகுதி 645 படிக்கட்டுகளுடன் சுமார் 1000 அடி உயரம் உடையது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து மலையில் இருந்த மரங்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென மரங்களில் பற்றி எரிய தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் மாடக்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது மலையில் நின்ற பீகாரை சேர்ந்த சோட்டுகுமார் மண்டல் (வயது 35) என்ற வாலிபர் கையில் 10-க் கும் மேற்பட்ட தீப்பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பீகார் வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் மலையில் வாழும் மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கும் நிலையில் உள்ளது.

சம்பவ இடம் கண்மாய் கரை பாதை என்பதால் தீயணைப்பு துறை வாகனம் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தீயை அணைத்தபிறகு தான் உயிரினங்கள் ஏதேனும் பலியாகி உள்ளதா என்று தெரிய வரும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்