காரில் திடீர் தீ
கொட்டாம்பட்டி அருகே காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கொட்டாம்பட்டி,
அழகர்கோவில் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் முருகன் (வயது 65). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று மாத்தூரில் இருந்து மணப்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி நான்கு வழி சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது நிறுத்தி வைக்கப்பட்ட காரில் திடீரென கரும்புகை கிளம்பியது. சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த முருகன், அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து தீயை போராடி அணைத்தனர்.
காரை விட்டு இறங்கிய சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டது உரிமையாளரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.