குளச்சல்,
குளச்சல் லியோன் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வரப்பட்டு மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று இரவு அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீ பிடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் அருகில் உள்ள வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.