தென்னை மரங்களில் திடீர் தீ
தென்னை மரங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
கந்தம்பாளையம் அருகே உள்ள மலைநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 45). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதை பார்த்த பாஸ்கரனின் மனைவி பானுமதி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி, அருகில் விவசாய நிலங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.