சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானம் திடீர் எந்திர கோளாறு - 174 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது.;
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 6.55 மணிக்கு 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானம் 168 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 174 பேருடன் புறப்பட தயாராக இருந்தது.
இந்த நிலையில் விமான எந்திரத்தை விமானி சரிபார்த்தபோது, விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை அறிந்தார். இது தொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விமான கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் குழுவினர் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே விமான நிலைய ஓய்வறைகளில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்ட பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் காலை 9.05 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 174 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.