சிவகாசி,
சங்கரன்கோவில் அருகே உள்ள பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 50). இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரத்தில் தங்கி இருந்து பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பத்தன்று சிங்கம்பட்டி-இடையன்குளம் ரோட்டில் சைக்கிளில் சென்றுள்ளார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளிராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.