அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் 'திடீர்' சாவு

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் என்று இறந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-14 21:14 GMT

திருவாரூர்,

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூரை சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவரது மகள் பர்வீன் பானு(வயது 23). இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பரக்கத்துல்லா என்பவருக்கும் கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பர்வீன் பானு பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

'திடீர்' சாவு

தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பர்வீன் பானு தனக்கு மயக்கம் வருவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த நர்சிடம் கூறி உள்ளனர். அதற்கு நர்சு, டாக்டர் இன்னும் வரவில்லை. வந்தவுடன் உடல்நிலையை பரிசோதிப்பார் என்று கூறியுள்ளார்.

இதனால் திகைத்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் வேறு டாக்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என தேடியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் வேறு டாக்டர் யாரும் இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பர்வீன் பானு திடீரென உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பர்வீன் பானு உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இறந்த பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது டாக்டர் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால்தான் பர்வீன் பானு உயிரிழந்ததாகவும், எனவே கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர், நர்சு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்