மின்கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்
திருக்கோவிலூர் அருகே மின் கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருக்கோவிலூர்
மின்கம்பம் நடும் பணி
திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்(வயது 40). இவரது வீட்டின் அருகில் நேற்று மின்கம்பம் நடும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மோகன்ராஜ் மகன் அருண்குமார்(22) என்பவர் மின் கம்பத்தை சாலையில் நடாமல் சாலையோரமாக நடும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஞானசேகர், இவரது மகன்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து அருண்குமாரை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது இதை தடுப்பதற்காக ஓடி வந்த அதே ஊரை சேர்ந்த கருணாகரன் மற்றும் சத்தியராஜ் ஆகியோருக்கும் சரமாரி அடி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திாியில் சோ்த்தனர்.
போலீசார் விரைந்தனர்
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ஞானசேகரனை அதே ஊரை சேர்ந்த அருண்குமார், கருணாகரன், செல்வம் மற்றும் கோவிந்தன் ஆகிய 4 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலை மற்றும் போலீசார் விரைந்து சென்று நடந்த சம்பவம் குறித்து கிராமமக்களிடம் விசாரணை நடத்தினர். தொடா்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6 பேர் கைது
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகர், அருண்குமார் ஆகிய இருவரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஞானசேகர், இவரது மகன்கள் சூர்யா(24), அசோக்(21), இவர்களின் நண்பர்கள் வாணாபுரம், கீழத்தேனூர் தமிழ்ச்செல்வன்(26), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரமடை ராஜி மகன் மகேஷ்(25) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சூர்யா, அசோக், தமிழ்செல்வன் மற்றும் மகேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல் ஞானசேகர் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் கருணாகரன், செல்வம், கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமார் மற்றும் கருணாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வம், கோவிந்தன் மற்றும் ஞானசேகர் ஆகிய 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.