ஆழ்துளை கிணறுடன் சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்க மானியம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுடன் சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-20 19:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுடன் சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

100 சதவீதம் மானியம்

தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை எந்திரம் மானியத்தில் வழங்குதல் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து சூரிய சக்தி மின் மோட்டார் மற்றும் குழாய் அமைத்தல் திட்டம் செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

26 விசை உழுவை எந்திரம் வழங்க ரூ.22 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார், சூரிய சக்தி மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயன் பெறலாம்

விசை உழுவை எந்திரம் சிறுகுறு, மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விகிதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் வாலாஜா உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, பாலார் அணைக்கட்டு ரோடு, வாலாஜா அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்