மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க மானியம்

காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-06-18 14:15 GMT

கோத்தகிரி, 

காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு பொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் கோத்தகிரியில் உள்ள வேளாண் பல்நோக்கு கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை அலுவலர் சுதா தலைமை தாங்கி பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு காய்கறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வங்கி கடனுதவி மற்றும் 35 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை, சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, செயல்பட்டு வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு மானியம் பெறலாம். இந்த திட்டத்தில் பங்கு பெறும் பயனாளிகள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

கேரட் ஜூஸ்

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளிகள் தனி நபராகவோ, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்களாக இருத்தல் வேண்டும். காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் கேரட் ஜூஸ், அல்வா, ஊறுகாய், சிப்ஸ், கேரட் மற்றும் பீட்ரூட் பவுடர் தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து திட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்பதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் நன்றி கூறினார். முகாமில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்