விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை
நெல் சாகுபடிக்குப்பின் பயிர் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்.
நெல் சாகுபடிக்குப்பின் பயிர் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்.
பயறு வகை பயிர்கள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் நெல்லுக்குப்பின் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக திட்ட பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டு நீடாமங்கலம் வட்டாரத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 45 ஆயிரத்து 682 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதன் அறுவடை காலம் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நெல்லுக்குப்பின் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த புதிய திட்டத்தினை வேளாண்மைத்துறை மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆதார் நகல்
இந்த திட்டத்தின் மூலம் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.50 அல்லது ரூ.48 மானியத் தொகையில் விதைகளை பெற்றுக்கொள்ள முடியும். நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள நீடாமங்கலம், வடுவூர், கருவாக்குறிச்சி மற்றும் தேவங்குடி வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் நகலை கொடுத்து உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையுமாறு நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.