50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் - வேளாண்மை உதவி இயக்குனர்
50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுவதாக திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுவதாக திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புகையான் தாக்குதல்
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் நடப்பு பருவத்தில் 18,500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் புழுதியில் விதைக்க இயலவில்லை.
எனவே வயலில் நீர் பாய்ச்சி சேரடித்து சேற்றில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். பயிர் நன்கு முளைத்து செழிப்பாகவும் உள்ளது. பயிர் தொகை பராமரிப்பு நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் அடர்த்தியாக முளைத்து உள்ளது. அறுவடை காலங்களில் பயிரின் அடர்த்தி மிகவும் அதிகமானால் காற்றோட்டம் இன்றி புழுக்கம் ஏற்பட்டு புகையான் தாக்குதல் மற்றும் இலை உரை அழுகல் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உயிர் உரங்கள்
எனவே விவசாயிகள் தங்களது நேரடி நெல் விதைப்பு வயலில் எட்டடிக்கு பட்டம் பிடித்து விட வேண்டும். உர செலவை குறைக்க உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். ரசாயன உரங்கள் அதிக அளவில் இடுவதால் விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன் மண்வளமும் பாதிக்கப்படுகிறது.
எனவே குறைந்த செலவில் மண் வளத்தை அதிகரிக்கும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை ஏக்கருக்கு தலா ஒரு லிட்டர் வீதம் மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவேண்டும். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
நுண்ணூட்ட சத்துகள்
நெல்லுக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களின் கலவை அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது. இவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. பசு மாட்டின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு பஞ்சகவ்யம் தயாரித்து பயிருக்கு தெளிக்கலாம்.
அதேபோல் கிராமங்களில் கிடைக்கும் வேம்பு, நொச்சி, நிலவேம்பு, எருக்கு, சோற்றுக்கற்றாழை, துளசி, பப்பாளி இலைகளை கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து பயிருக்கு தெளிப்பதன் மூலமாகவும் கூடுதல் மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.