பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி
பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம் மற்றும் மண்புழு படுக்கை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முக்கிய அம்சமான மண்புழு உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மண்புழு உரத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார்.
மேலும் இல்லம் தேடி வேளாண் கடன் அட்டை திட்டத்தில் வேளாண் கடன் அட்டை பெறாத கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு, விண்ணப்பங்கள் பெறுவது குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்புழு படுக்கை வழங்கப்பட்டது.
இதில் தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுப்பேட்டை உதவி வேளாண்மை அலுவலர் ராமதாஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீராசாமி ஆகியோர் செய்திருந்தனர்.