ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கு மானியத்துடன் இடுபொருட்கள்

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கு மானியத்துடன் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-23 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கு மானியத்துடன் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடிப்பட்டம்

ஆடிப்பட்டம் தேடி விதை என முன்னோர்கள் தெரிவித்தனர். அறிவியல் பூர்வமாக ஆடிப்பட்டத்தில் நாம் காய்கறி விதைகள் விதைப்பு செய்வதில் பலவிதமான நன்மைகள் உண்டு. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதினால் காய்கறி சாகுபடி செய்வதற்கு தேவையான சீதோசன நிலை சரியாக அமைந்திருக்கும்.

அதுமட்டுமல்லாமல் சற்றே குறைந்த வெப்பநிலை நிலவுவதால் காய்கறி வளர்ப்பிற்கு தேவையான சராசரி சூரிய ஒளியும், தட்பவெப்பநிலையும் கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க 4 மாதங்கள் அவகாசம் இருப்பதால் ஆடி மாதத்தில் காய்கறிகள் சேதம் அடைவது தவிர்க்கப்படுகிறது.

தட்பவெப்ப நிலை

அதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் விதைப்பு செய்த காய்கறியானது ஆவணி மாதத்தில் குறிப்பாக பண்டிகை மற்றும் விழா காலங்களில் அறுவடைக்கு தயாராகிறது. இதனால் காய்கறிகளை விவசாயிகள் சந்தைப்படுத்துவது மிகவும் எளிது. இது போன்ற காரணங்களால் ஆடி பட்டத்தில் தேடி விதை என்ற கூற்று நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

திருவாரூர் மாவட்டத்தின் மண் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற காய்கறியான கத்திரி, மிளகாய், கீரை, வெண்டை, பாகல், பீர்க்கங்காய், புடலங்காய், முள்ளங்கி, கொத்தவரை மற்றும் அவரை போன்றவற்றை ஆடி மாதத்தில் விதைப்பது மிகவும் ஏற்றது.

இடுபொருட்களுடன் மானியம்

ஆடி மாதத்தில் நடவுக்கு தேவையான கத்திரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் மூவாநல்லூரில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் இருப்பில் உள்ளது. இதுபோன்ற நேரடி விதைப்பு விதைகளான வெண்டை விதை ஒரு எக்டருக்கு 2½ கிலோ வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்களுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது. கத்திரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொருளுடன் கூடிய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கத்திரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களான கணினி சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் நகல் சமர்ப்பித்துபெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்