தி.மு.க.வில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்

தி.மு.க.வில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Update: 2022-09-20 23:56 GMT

சென்னை,

தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார். இவர் கட்சி தலைமை மீது சமீப காலமாகவே அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. இதேபோல விருதுநகரில் கடந்த 15-ந்தேதி நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியது.

ஆனாலும் அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல், மவுனம் சாதித்து வந்தார். இந்தநிலையில் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விலகல் ஏன்?

இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கருணாநிதியிடமே தெரிவித்துவிட்டேன். கருணாநிதி மறைவுக்குப்பின், அவருடைய விருப்பத்தின்படி மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கட்சி பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

மனநிறைவோடு ஓய்வு

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கட்சி மகத்தான வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது.

இந்த நிறைவோடு, அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியன்று பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்