தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

கடலூர் அருகே வழக்கு விசாரணைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-13 18:45 GMT

கடலூர்:

கடலூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு அய்யப்பன் கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சனி ஆஜராகவில்லை. இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து செய்வது தொடர்பாக கடிதம் பெற்று தருமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அய்யப்பன் மனு அளித்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

இதையடுத்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் (55) அய்யப்பனிடம் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு சம்பந்தமாக விசாரிக்க தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என பாலசுந்தரம், அய்யப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன், இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நேற்று மாலை அய்யப்பன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பாலசுந்தரத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்ச வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்