சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-04-21 16:31 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி விழா மற்றும் கிரிவலத்தை முன்னிட்டு துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று மாலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழா மற்றும் கிரிவலம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த வருடமும் சித்ரா பவுர்ணமி வருகிற மே மாதம் 4-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி இரவு நிறைவடைகின்றது. இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

கட்டணமில்லா தரிசன சேவை

பக்தர்கள் தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர்,

இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.

மேற்படி இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட உள்ளது.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட உள்ளது.

பொது தரிசன வழி சிறப்பு தரிசன வழி திருமதில் வெளிப்புறம் - தற்காலிக நிழற்பந்தல் தேங்காய் நார் தரைவிரிப்பு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

பக்தர்கள் வெயில் காரணமாக பாதம் வெப்ப பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோவிலில் உள்ள வரிசையில் நகரும் தடுப்பான்களுக்கு கீழும் வெள்ளை அடித்தல், மருத்துவ துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருத்தல், தற்காலிக பஸ் நிலையங்கள், மின்விளக்குகள், கிரிவலம் செல்லும் பக்கதர்கள் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் திரும்ப அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வகையில் தகவல் பலகை அமைத்தல் வேண்டும்.

14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.

சித்ரா பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர்.

முழு ஒத்துழைப்பு

கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்