ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்

ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

Update: 2023-07-05 18:45 GMT

பனைக்குளம், 

ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புள்ளி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறையின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளிதரன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிகளில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

குடிநீர் திட்ட பணி

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை அவ்வப்போது முடிக்க வேண்டும். குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும். ஊராட்சிகளில் வரி இனங்கள் இணையதளம் மூலம் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும்போது ரொக்கமாக பெறாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தின் பணிகள் காலதாமதம் ஆவதை தவிர்த்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குளங்கள், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டுதல் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திலேயே முடிக்க வேண்டும்.

அதேபோல் ஊராட்சிகளில் முழுமையாக தெரு விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். ஊராட்சிகளில் அவ்வப்போது நடைபெற்று வரும் கிராம சபை கூட்டங்களை சிறந்த முறையில் நடத்தி பொதுமக்களை முழு அளவில் பங்கேற்க செய்து, ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பகிர்ந்து பணிகளை மேற்கொள்ளும்போது அனைவரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

சிறந்த ஒன்றியம்

ஒரு ஊராட்சியில் எத்தகைய திட்டங்கள் தேவை என்பது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியும். ஒருங்கிணைந்து செயல்படும் ஒவ்வொரு ஊராட்சியும் சிறந்த வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பெருமைக்குரிய பகுதியாகும். இங்கு இக்கூட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் மற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்மாதிரி ஊராட்சி ஒன்றியமாக மண்டபம் ஊராட்சி ஒன்றியம் திகழ வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள 28 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்