அரசு பள்ளியில் ஆய்வு: மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில் திடீர் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்தார்.

Update: 2022-06-13 23:05 GMT

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னை தலைமைச்செயலகம் நோக்கி திரும்பி கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் வடகரை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென சென்றார்.

அந்த பள்ளியில் ஆய்வை அவர் மேற்கொண்டார். மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறையை சென்று பார்வையிட்ட பின்னர், ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்த்தார். அப்போது 10-ம் வகுப்புக்கு சென்று மாணவர்களோடு பெஞ்சில் அமர்ந்து கொண்டார். மாணவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து, 4-வது பெஞ்சில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்திருந்தார்.

உன்னிப்பாக கவனித்த மு.க.ஸ்டாலின்

அந்த நேரத்தில் வகுப்பறையில் தமிழ் ஆசிரியை மாணவர்களுக்கு அடிப்படை இலக்கணம் குறித்து பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆசிரியை நடத்திய பாடத்தை உன்னிப்பாக கவனித்தார். அப்போது ஆசிரியை அடிப்படை இலக்கணத்தில் வரும் குறில், நெடில் குறித்து பாடம் எடுத்தார். சிறிது நேரம் அமர்ந்து ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் எழுந்து புறப்பட்டபோது, வகுப்பறை மாணவர்கள் நன்றி அய்யா என்று கூறினர்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மதியஉணவு வழங்கக்கூடிய சத்துணவு மையத்தை அவர் பார்வையிட்டார். அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்ததோடு, தரமான உணவுகளை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த சத்துணவு பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆய்வை முடித்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அங்கிருந்த பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை நிற்கவைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தவறாமல் பின்பற்ற வேண்டும்

இந்த ஆய்வு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் உள்ள கல்விக்கூடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இருந்தால்தான், அங்கு கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் முறையாக நடைபெறும். எனவே, கட்சி சார்பற்ற முறையில், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் ஆகியோர் அவரவர்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை குறிப்பாக ஆய்வுசெய்து, அவற்றில் ஏதேனும் குறைபாடுகளை கண்டறிந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து, அவற்றை களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக மாணவச்செல்வங்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறைத்தொட்டிகள் மூடியிருப்பதையும், அதேபோன்று, குடிநீர்த்தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதையும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் மேற்படி அறிவுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்