அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்கும்அரசு சலுகைகளை வழங்க கோரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு சலுகைகளை வழங்க தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் டி.நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:-
திருமண்டலத்தில் 120 சேகரங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 20 புதிய சேகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமண்டலத்துக்கு தூத்துக்குடி மறவன்மடம் பகுதியில் 2 ஏக்கரில் புதிய நிர்வாக அலுவலகம் கட்டப்பட உள்ளது.
மருத்துவர், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு, காலை சிற்றுண்டி போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்திடும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினோம். திருமண்டலத்துக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள 87 ஆசிரியர்கள் மற்றும் 16 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்கி, ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயர்புரத்தில் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையத்துக்கு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஜி.யு.போப் பெயரை சூட்ட வேண்டும்.
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், பட்டியலின மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம் என்று கூறினார். பேட்டியின் போது, திருமண்டல உபதலைவர் வி.எம்.எஸ்.தமிழ்செல்வன், குருத்துவ செயலாளர் எம்.பி.இம்மானுவேல் வான்ஸ்றக், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மேலாளர் டி.பிரேம்குமார் ராஜாசிங், செயற்குழு உறுப்பினர் ஜான்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.